அரசின் ஆன்லைன் போர்ட்டலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், மேல்முறையீடு செய்ய முடியவில்லை.
https://kmut.tn.gov.in/ போர்ட்டலில் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் அணுக முயற்சித்ததால், இணையத்தில் செயலிழப்பு ஏற்பட்டது. இருப்பினும், மாலையில் ஓரளவு சீரமைக்கப்பட்டது.
சென்னையின் பல பகுதிகளில் உள்ள விண்ணப்பதாரர்கள், நிராகரிக்கப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ், தங்கள் மொபைல் போன்களில் வரவில்லை என்று தெரிவித்தனர். இத்திட்டத்திற்காக மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அதில் 1.06 கோடி பேர் மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகையைப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் நிராகரிப்புக்கான காரணங்களை அறிய போர்ட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் செவ்வாயன்று, ஏராளமான பெண்கள், இ-சேவை மையங்களில் தங்கள் நிராகரிப்புகள் குறித்து விசாரிக்க குவிந்தனர். இருப்பினும், போர்டல் செயலிழந்ததால், இந்த மையங்களில் உள்ள ஊழியர்கள் விண்ணப்பதாரர்களை ஓரிரு நாட்களுக்குப் பிறகு திரும்பி வருமாறு அறிவுறுத்தினர்.
அதிக ட்ராஃபிக் காரணமாக, இணையதளம் முழுமையாக லோட் ஆகவில்லை. OTP பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஊழியர் ஒருவர் கூறினார்.
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன், உதவித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போயுள்ளன என்றார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை சரி செய்ய ஒவ்வொரு ஆட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இ-சேவை மையங்களில் பெண்கள் இலவசமாக செப்டம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள சர்வர் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“