கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கு தனி ஏ.டி.எம் கார்டு வழங்கப்பட உள்ளது. அதற்கான கலர்ஃபுல் ஏ.டி.எம் கார்டு படம் வெளியாகியுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உதவித் தொகைத் திட்டம், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அவருடைய பிறந்த நாளில் தொடங்கி வைக்கிறார்.
குடும்பத் தலைவிகளுக்கு தமிழ்நாடு அரசு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமை திட்டத்திற்காக வழங்கப்படும் தனி ஏ.டி.எம் கார்டுகளுக்கான படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற அட்டைப்படத்துடன் பெண்களின் உருவங்கள் அச்சிடப்பட்ட ஏ.டி.எம் கார்டுகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு, பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்து விசாரணை அலுவலராக கோட்டாட்சியர் செயல்படுவார் என்று மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“