சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிராமத்திற்கு உட்பட்ட மெரினா கடற்கரை பகுதிக்கு அருகில் உள்ள வங்காள விரிகுடா கடற்பரப்பினுள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவாக நிறுவப்படவுள்ள பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைப்பதற்கு இன்று காலை கருது கேட்பு கூட்டம் நடைபெற்றது.

"பொது மற்றும் தமிழக அரசு பயன்பாட்டுக்கான அரசுக்கு சொந்தமான அனைத்து அரசு கட்டிடங்களையும் தமிழ்நாடு பொதுப் பணித்துறை நிர்மாணித்து பராமரிக்கிறது.
காமராஜர் சாலையில் தமிழ் இலக்கியத்திற்கு முத்திரை பதித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி, இயல், இசை, நாடகம் போன்றவற்றிற்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் வகையில், பேனா நினைவுச்சின்னம் மும்மொழியப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புகளுக்காக "டாக்டர் கலைஞர்" மற்றும் "முத்தமிழ் அறிஞர்" எனப் போற்றப்படுபவர். அவரது சிறந்த தொலைநோக்கு சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் அவரது பேனாவை 42 மீட்டர் உயர நினைவுச்சின்னமாக நிறுவப்பட உள்ளது.
2021ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அரசு ஆணைப்படி போடப்பட்ட திட்டம் ஆகும்.
மேலும், இந்த பேனா நினைவுச்சின்னம் CRZ IV A, CRZ I A, CRZ II க்குள் வருகிறது மற்றும் அனைத்து CRZ நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும்", என்று இந்த திட்டத்தைப் பற்றின விவரங்கள் இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பேனா நினைவிடம் நிறுவுவதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக்கணிப்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பங்கேற்று தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கூறியுள்ளதாவது, "ஏற்கனவே இந்திய நிலப்பரப்பிற்கு நிகராக கடலுக்குள் நெகிழி கழிவுகள் தேங்கியுள்ளது. கடற்கரையில் திமிங்கலம் முதல் அனைத்து உயிரினங்களும் இறந்து கரையொதுங்குகிறது, அவற்றிற்குள் நெகிழி கழிவுகள் தான் அடங்கியுள்ளது.
தற்போது இருக்கும் சூழலில், இவை பெரும் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் காட்டும் நினைவிடத்தை அண்ணா அறிவாலயத்திடம் வைக்கலாமே?
இவர்களுக்கு எழுதாத பேனாவுக்கு சிலை வைப்பது பகுத்தறிவு; எழுதிய பேனாவை ஆயுத பூஜைக்கு வைத்து கும்பிட்டால் மூடநம்பிக்கை. பள்ளிக்கூடத்தை சீரமைக்க மக்களிடையே நிதி எதிர்பார்க்கும் பொழுது, இந்த பேனா நினைவிடத்திற்கு மட்டும் எப்படி காசு வருகிறது?
கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைக்க நினைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் கடலுக்குள் வைக்கவேண்டும் என்கிற திட்டத்திற்கு எங்களால் அனுமதிக்க முடியாது", என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.