சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடம், அருங்காட்சியகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கலைஞர் அருங்காட்சியகம் மார்ச் 6-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. புதியதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம், அருங்காட்சியகத்தை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் நினைவிடத்தில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலைஞர் நினைவிடத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம் நிலவறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில் கலைஞர் கருணாநிதியின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் மு. கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகம் எப்போது பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், மார்ச் 6-ம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நினைவிடத்தில் நிலவறையில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தில், கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
கலைஞர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய சிறப்பு அமசங்களைக் கொண்ட கலைஞர் உலகம் அருங்காட்சியகம் மார்ச் 6-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த இணைய முகவரியில் பதிவு செய்து, அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டும். கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் முற்றிலும் இலவசமாக கண்டு களிக்கலாம்.
கலைஞர் உலகத்தைப் பார்வையிட ஒரு நபர், ஒரு அலைபேசி எண் மூலம் பதிவு செய்து, அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் உலகம் அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்கு, ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டு பெற்று செல்லலாம். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தைக் காணவரும் பொதுமக்கள் தாங்கள் அனுமதி சீட்டு பெற்ற காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வர வேண்டும். பொதுமக்கள் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு மட்டுமே அனுமதிச் சீட்டு பெற வேண்டும். மற்றபடி, பொதுமக்கள் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு எதுவும் தேவையில்லை. பொதுமக்கள் நேரடியாக நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன மற்றும் புதுமையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத்தினைப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசிற்கும், அங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பினை நல்கி கண்டு களித்திடுமாறு அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.