தமிழ்நாட்டில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' அமைக்கும் மசோதா, ஆளுநரால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்ட மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதலமைச்சர் இருப்பார். அவர் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்குத் தலைமை வகிப்பார். மேலும், அவரது முன் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகம் கௌரவப் பட்டங்களை வழங்க முடியாது. உயர்கல்வித் துறை அமைச்சர், இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகச் செயல்படுவார் என்று சட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவில் பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். இந்தக் குழுவில் வேந்தரின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் இருப்பார். மேலும், அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலாளர் தகுதிக்குக் குறையாத அதிகாரி இருப்பார். பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் குழுவில் இடம் பெறுவார்கள். இந்தக் குழு பரிந்துரைக்கும் 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து, வேந்தர் துணைவேந்தரை நியமிப்பார் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் ஏப்ரல் 24 ஆம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்று தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
‘இதைத்தொடர்ந்து, கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தும் விதமாக, உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன் இந்த மசோதாவைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.