2011ம் ஆண்டு முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை, முதல்வர் பழனிசாமி 201 கலைஞர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.
இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதற்கான தேர்வுக்குழு மூலம் சாதனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. தேர்வுக்குழுவில் நிலவி வந்த சிக்கல் காரணமாகவும், கலைமாமணி விருது மீது அரசு கவனம் செலுத்தாமல் இருந்ததன் காரணமாகவும் இது தள்ளிப்போய்கொண்டே இருந்தது. இந்த நிலையில் கலைமாமணி தேர்வுக்குழுவில் தவறான உறுப்பினர்கள் முறையின்றி சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் தவறாக இருக்கிறது. இதில் பழைய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்றும் புகார் வந்தது.
இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் விசாரணை நடந்து வந்தது. இதில் கடந்த வாரம் தீர்ப்பளித்த நீதிமன்றம், கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முறைகேடு எதுவும் இல்லை. விருது வழங்கும் விழாவை எப்போதும் போல நடத்தலாம் என்று கூறியது. அதேபோல் வருடம்தோறும் ஜூன் 30க்குள் விருது பெறும் நபர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இன்று ( 13ம் தேதி), சென்னை கலைவாணர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா, தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பாக நடைபெற்றது. இதில் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த விழாவுக்கு, சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். 3 சவரன் பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். லேனா தமிழ்வாணன், கோவி, மணிசேகரன் , திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், நடிகர் பாண்டு, வயலின் கலைஞர் லால்குடி விஜயலட்சுமி, தவில் வித்வான் பழனிவேல், ஆர் ராஜசேகர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடகி சசிரேகா, நடன இயக்குனர் புலியூர் சரோஜா நடிகை குட்டி பத்மினி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.