கலாக்ஷேத்ரா மையத்தில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவை கொடுத்ததாக பல்வேறு புகார்கள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக, கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக மாணவிகள் கலாக்ஷேத்ரா மையத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராக இருந்தாலும் காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மாணவி ஒருவர் ஹரி பத்மன் மீது புகார் அளித்திருந்தார். 2017 முதல் 2019 வரை அங்கு படிக்கும்பொழுது, தனக்கு ஹரி பத்மன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும், பல்வேறு உள்நோக்கத்துடன் தன்னிடம் பழகியதாகவும் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில் மூன்று பிரிவுகளுக்கு கீழ் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 354 ஏ (பாலியல் வன்புணர்வு), 509 (பெண்ணின் மான்மை சிதைக்கும் வகையில் நடத்தல்) உள்ளிட்ட பிரிவுகளோடு வேலை பார்க்கும் இடங்களில் பெண்களை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் (பிரிவு 4) உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் தன்னை காவல்துறை தேடுகிறார்கள் என்று தெரிந்தவுடன், தனது கைபேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
ஹைதராபாதில் நடைபெறும் மூன்று நாள் கலைநிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்கிறார் என்ற தகவலும் வெளியானதால், காவல்துறை ஹரி பத்மனை கண்காணித்து வந்தனர்.
இது தொடர்ந்து, நேற்று அவர் யாருடன் கடைசியாக தொலைபேசியின் மூலம் தொடர்பின் இருந்தார் என்ற பட்டியலை கொண்ட போலீசார், அவர்களையும் கண்காணித்து வந்தனர்.
மேலும், நேற்று இரவு ஹைதெராபாதில் இருந்து சென்னை திரும்பிய ஹரி பத்மன், வடசென்னையில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்ததாக வெளியான தகவலைக் கொண்டு காவல்துறை இன்று அதிகாலை அவரை கைது செய்தது.
ஹரி பத்மன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளுக்கு அவரால் ஜாமீன் வாங்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்ட ஹரி பத்மனிடம் விசாரணை நடைபெற்று, நடந்த குற்றத்திற்காக வாக்குமூலம் பெறப்பட்டு, நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil