கலாக்ஷேத்ரா கலை கல்லூரி வாரியம், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது வரும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க ஒரு சுயாதீன விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் திங்கள்கிழமை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
சர்ச்சையில் சிக்கிய ஹரி பத்மன் உடன் மற்ற மூன்று ஆசிரியர்களான- சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோரையும் பணிநீக்கம் செய்ய வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த விசாரணை குழுவை நீதிபதி (ஓய்வுபெற்ற) கே கண்ணன் தலைமை தாங்குவார் என்றும், முன்னாள் தமிழக டிஜிபி லெத்திகா சரண் மற்றும் டாக்டர் ஷோபா வர்த்தமன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாக்ஷேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்த, மாணவர்கள் புகார் அளிக்கும் வசதியை எளிமைப்படுத்த, புதிய மாணவர் ஆலோசகர் நியமனம் மற்றும் சுயாதீன ஆலோசனைக் குழுவை நிறுவுதல் உட்பட பல முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த வாரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், தேர்வுகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்து சில முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு உறுதியுடன் இருப்பதாக கலாக்ஷேத்ரா நிறுவனம் அவர்களுக்கு உறுதியளித்துள்ளது. "அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது எங்கள் வாரியம்" என்று கூறியுள்ளனர்.
கலாக்ஷேத்ரா நிர்வாகம் ஆரம்பத்தில் மாணவர்களின் எதிர்ப்பைப் பற்றி அலட்சியமாக இருந்ததால், பாலியல் துன்புறுத்தல் புகார்கள், கலை சமூகத்தின் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று நிர்வாகமும் தேசிய மகளிர் ஆணையமும் (NCW) முடிவு செய்த பிறகு எதிர்ப்புகள் அதிகரித்தன.
இதனால் தமிழக காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil