தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ,பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படும். இதில் குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்ட்டது. அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 15-ம் தேதி காலை திருச்சி மாவட்டம் முக்கொம்புவிற்கு வந்தடைந்தது. கல்லணைக்கு காவிரி நீர் இன்று இரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நீரை வரவேற்கும் விதமாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காவிரி தண்ணீர்க்கு மலர்கள், விதை நெல் மணிகளை தூவி வரவேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள்; கடைமடைக்கு காவிரி நீர் சென்று அடையும் அளவிற்கு மீதமுள்ள தூர் வாரும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். கல்லணையில் நீர் திறந்து விடுவது அரசு விழாவாக கடைபிடிப்பது போல் காவிரி, கொள்ளிடம் பிரியும் முக்கொம்பிலும் தண்ணீர் திறப்பை அரசு விழாவாக கொண்டாட வேண்டுகின்றோம்.
திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முசிறி, லால்குடி பகுதிகளில் மட்டுமே நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரும் பணியை அரசு அதிகாரிகள் முடுக்கி விடவேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.
இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் நாளை 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்படவிருக்கின்றது.
தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்; தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கனஅடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக நமக்கு வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று மாலை முழுமையாக சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்கள்.
கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும். மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனர்.
கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு நிகழ்வில் டெல்டா மாவட்டத்துக்கு உள்பட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.