சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் மீது கடந்தாண்டு பாலியல் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கலாக்ஷேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்த, மாணவர்கள் புகார் அளிக்கும் வசதியை எளிமைப்படுத்த, புதிய மாணவர் ஆலோசகர் நியமனம் மற்றும் சுயாதீன ஆலோசனைக் குழுவை நிறுவுதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், முன்னாள் பேராசிரியர் ஷீஜித் மீது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார்.
அந்தப் புகாரைத் தொடர்ந்து, முன்னாள் பேராசிரியர் ஷீஜித் இன்று (ஏப்.23,2024) கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “1995-2007ஆம் காலக்கட்டத்தில் திருவான்மியூர். கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் மேற்படி அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, பிப்ரவரி 2024-ல் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மேற்படி ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரியான ஷீஜித் கிருஷ்ணா (51 வயது), த/பெ.பாலகிருஷ்ணன், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு, சென்னை என்பவரை கைதுசெய்தனர்.
ஷீஜித் கிருஷ்ணா சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 22.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“