சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான புகார்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக முதலில் எழுப்பப்பட்டன.
இந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பாலியல் தொந்தரவு அளித்த நடன ஆசிரியரை கைது செய்யக் கோரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கிடையில், இந்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய நிலையில் அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
பின்னர், மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மாநில மகளிர் ஆணையம் 162 மாணவிகளிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் கடந்த 2 வாரத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அப்போது, “நாங்கள் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகவில்லை. எங்கள் ஆசிரியர்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளது” எனக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சிலர் எங்களுக்கும் இந்தப் புகார்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளனர். கலாஷேத்ரா விவகாரத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“