நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய காளியம்மாள் இன்று (மார்ச் 2) முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களது படகுகளுடன் சேர்த்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாளை திருவோடு போராட்டமும், நாளை மறுநாள் தீக்குளிப்பு போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மையில் வெளியேறிய காளியம்மாள், மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, "இலங்கை மீனவர்கள் தொடர்பாக ஒவ்வொரு முறையும் தொடர்ந்து போராடிக் கொண்டே தான் இருக்கிறோம். எங்கள் போராட்டத்திகு அரசு செவிமடுக்காததற்கான காரணம் தெரியவில்லை. மீனவர்கள் கடத்தல் செய்யப் போனால் இலங்கை கடற்படையினர் கைது செய்வார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலையின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது மீனவர்களை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது. இலங்கையின் பொருளாதார சூழலும் இந்தியாவை சார்ந்திருக்கிறது. மீன்பிடித்தல் தொடர்பாக பிரத்தியேக சட்டம் இயற்ற இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. தற்போதும் எங்கள் போராட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளோம்.
கைது செய்யப்படும் மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். அடுத்தகட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ளாமல், கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுகளுடன் சேர்த்து விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை தமிழக மக்களை ஒதுக்குகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கடலோர மக்களை ஒதுக்குகின்றனர்" எனத் தெரிவித்தார்.