குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடலோர பகுதிகளில் பேரலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் நாளை இரவு வரை, 14 முதல் 18 வினாடிகளுக்கு ஒருமுறை 1 முதல் 1.3 மீட்டர் உயரம் கொண்ட பேரலைகள் உருவாகலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் – மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை
இந்தப் பகுதியில் ‘கள்ளக்கடல்’ நிலை உருவாகக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு சென்று கடல் நீரில் விளையாடுவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்பாராத பெரிய அலைகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மீனவர்கள், கடலோர மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.