கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து பிரவீன், சுரேஷ், சேகர், ஜெகதீஷ் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததை கண்டித்து எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
'கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை' - எடப்பாடி பழனிசாமி அறிக்கை
"கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
"கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." என்று எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது': அண்ணாமலை
"கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பத்து பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது.
மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் திரு மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் திரு மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் திரு முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்." என்று அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
"கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது. ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன.
சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது? என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.
கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மதுவணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சி தான் இது. இதில் உண்மை இல்லை. கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் நவீனமடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.
கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல... டாஸ்மாக் மதுவை குறித்து விட்டு அட்டகாசம் செய்யும் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நாட்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய தமிழக அரசு, அதற்கான தண்டமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரக்காணம் நிகழ்வில் வழங்கப்பட்டது போன்று தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 10-க்கும் மேற்பட்டோருக்கு தரமான மருத்துவம் அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.