கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, தனது சாதி மறுப்புத் திருமணம் குறித்த வதந்திகளை மறுத்தார்.
முன்னதாக, திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியை பிரபு தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்.
இதுகுறித்து, மணப்பெண்ணின் தந்தை சுவாமிநாதன் வெளியிட்ட வீடியோ ஒன்றில், "எனது குடும்பத்தினருடன் பிரபு எம்.எல்.ஏ, மகன் போல பழகி வந்தார். ஆனால் சுமார் 20 வயது வித்தியாசமுள்ள எனது மகளை இப்படி கடத்திச் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. நான் சாதி பார்க்கவில்லை. ஆனால் வயது வித்தியாசம் பார்க்க வேண்டுமல்லவா?" என்று பதிவிட்டார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ பிரபு தனது திருமணம் குறித்து வெளியாகும் தவறான தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட வீடியோவில், "எனது திருமணம் குறித்து, சில தவறான வதந்திகள் வலம் வருகிறது. நான் சவுந்தர்யாவை கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வற்புறுத்தி கல்யாணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. நாங்க கடந்த 4 மாதங்களாக காதலித்து வருகிறோம். சவுந்தர்யாவின் வீட்டிற்குச் சென்று, முறையாக பெண் கேட்டோம். பெண் வீட்டார் தர மறுத்தனர். வேறு வழியின்றி எனது வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நான் கொலை மிரட்டல் விடுத்தோ, ஆசை வார்த்தையைக் காட்டியோ திருமணம் செய்து கொள்ளவில்லை " என்று பதிவிட்டார்.
இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏ ஏ.பிரபு, தனது மகளை கடத்தியதாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த, மனு மீதான விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil