கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறிய நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த சம்பம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு, விஷ சாராயத்தை விற்பனை செய்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு இந்த விவகாரத்தில் மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி விசாரணையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அதிமுக, பாஜக மற்றும் பாமக சார்பில் விஷ சாராய வழக்கை சிபிசிஐடிக்கு பதிலாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் உத்தரவுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ”கள்ளக்குறிச்சி வழக்கில் தமிழக காவல்துறை விசாரணையை முடித்துவிட்டது.
சென்னை ஐகோர்ட்டு முடிவில் தலையிட விரும்பவில்லை” என கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்றும், சிபிஐ விசாரணையை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“