நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
தமிழகத்தின் மாபெரும் கட்சிகளான தி.மு.க - காங்கிரஸோடும், அ.தி.மு.க - பா.ஜ.கவோடும் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளராக க.பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி களம் காணுகிறார். அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார் நடிகரும், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின்.
பிரச்சார வேனில் நின்று வாக்கு சேகரித்த அவருக்கு வியர்த்து கொட்டியது. உடனே பின்னால் நின்றிருந்த வேட்பாளர், கெளதம சிகாமணி அவரது வியர்வையை துடைத்து உதவினார்.
இதனை சிலர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் வேறு சிலரோ, சின்ன வயதிலிருந்தே பழக்கப்பட்ட நண்பர்களாக இவர்கள் இருந்திருக்கக் கூடும், அதனால் இதிலென்ன தவறு என்கிறார்கள்.
இந்நிலையில், இன்று கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவரது வருகையையொட்டி 300 தி.மு.க-வினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்கள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பெட்ரோல் நிரப்ப வந்த 165 பேரின் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.