மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம், மனித மாண்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜவாத் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக, அவர் ஷூ-வை வெளியே கழற்றினார். தொடர்ந்து சைகையில் குமாஸ்தாவை அழைத்து, அதை எடுக்க சொன்னார். இந்நிலையில் குமாஸ்தா அந்த ஷூ-வை கையில் எடுத்தச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: “ பொதுவாக காவல்துறை அதிகாரிகள் இடத்திலேயே தலித் விரோதா உளவியல் என்பது மேலோங்கி இருக்கிறது. எனவே காவல்துறை அதிகாரிகளுக்கு சமூக நீதி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் , சமத்துவம் தொடர்பாகவும் விழிப்புணர்வு பயிற்சியை அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி தேவைப்படுகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படித்த அதிகாரிகளுக்கும் சமத்துவம் மற்றும் மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.