சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாயத்தில் ஸ்ரீமதியின் தாயார் செல்வி, மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையை சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகளுக்கு நீதி கோரி மனு அளித்தார்.
தொடர்ந்து, தனது மகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதனால் சட்டப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு அளி்கக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையும் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்ததாக கூறப்படுறது.
முன்னதாக ஸ்ரீமதியின் தாயார் செல்வி ஆகஸ்ட் 27ஆம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து, இந்த விவகாரத்தில் உரிய விசாரணையை உரிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிக்கப்படாமல் தண்டனை பெற்று தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீமதியின் தாயார் செல்வி, " வழக்கு குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விடப்படாமல் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கைகள் விவகாரம் தொடர்பாக எந்த ஆவணமும் எங்களிடம் வழங்கப்படவில்லை. ஸ்ரீமதி உடற்கூறாய்வு செய்யப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை.
ஸ்ரீமதி விவகாரத்தில் முதலமைச்சர் உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலை நாட்ட வேண்டும். ஸ்ரீமதியின் தோழிகள் என பள்ளி மாணவிகள் சிலர் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் உண்மையில் ஸ்ரீமதியின் தோழிகள் தானா? என்பது எனக்கு தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
மேலும், “பள்ளி தாக்கப்பட்ட விவகாரத்தில் சில அப்பாவி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் ” என்றும் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் உயிிரிழந்தார். இது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஒரு வாரத்துக்குள் ஸ்ரீமதியின் தாயார் செல்வி, அண்ணாமலையை சந்தித்த மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.