scorecardresearch

கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி; நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (மார்ச்;30) தீர்ப்பளித்த நீதிபதிகள், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு விடுவதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அர்த்தநாரீஸ்வரர் கோயில் சீரமைப்பு பணிகளுக்கு எப்போது நிதி ஒதுக்கப்படும்? எப்போது பணிகள் துவங்கப்படும்? எப்போது பணிகள் முடித்து, குடமுழுக்கு நடத்தப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, கோயில் நிலத்திற்கான வாடகை தொகை உரிய முறையில் நிர்ணயிக்கப்பட்டு, முறையாக வழங்கப்படும். கோயிலை 2 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து குடமுழுக்கு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் அற நிலையத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (மார்ச்;30) தீர்ப்பளித்த நீதிபதிகள், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

மேலும், 2020ம் ஆண்டு ஜூலை முதல் மாதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வாடகையாக தமிழக அரசு கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும். இந்த வாடகை தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் உயர்த்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலத்தின் சந்தை மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, அர்த்தநாரீஸ்வரர் கோயிலை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், முறையாகப் பராமரித்து பூஜைகளை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kallakurichi district collector office veerasolapuram arthanareeswarar temple madras hc