கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18 ஆம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்ககளில் பலரும் தற்போது அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். இதனால், பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 54 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், "140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம். அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம்.
உயிரிழந்தவர்களில் 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. விஷச் சாராயம் அருந்தியவர்களை கண்டறியும் பணியை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“