விஷச் சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி எண்ணிக்கை 52 ஆகியிருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. விஷச் சாராயம் குடித்து 90-க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில், கள்ளச்சாராயத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போலீசார் களமிறக்கப்பட்டு அதிரடி காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், விஷச் சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மோகன்ராஜ், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாவட்ட எஸ்.பி-யாக பொறுப்பேற்றதில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியான நடவடிக்கை எடுத்தார். இவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரு. மோகன்ராஜ் அவர்கள். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக்…
— K.Annamalai (@annamalai_k) June 21, 2024
கள்ளக்குறிச்சி விஷச் சாராயப் பலிகள் பின்னணியில், இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த மோகன்ராஜ் அவர்கள், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன” எனப் பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலையின் பதிவு சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ், தாம் விருப்ப ஓய்வுபெற்றதற்கான காரணத்தை விளக்கி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் (ஓய்வு) அவர்களின் மறுப்பு விளக்கம் pic.twitter.com/75rfXz8pvY
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) June 21, 2024
அதில், “அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்து கொள்வதற்காக எனது மனைவியுடன், நான் அங்கு செல்ல வேண்டி இருந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றேன். ஆனால், எனது இந்த முடிவு குறித்து கள்ளக்குறிச்சி துயர சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தற்போது சிலர் சமூக வலைதளங்களில் தவறான விரும்பத்தகாத தகவலை பரப்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.