கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 100-க்கு மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விற்பனையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சின்னத்துரையை தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள். சாராய வியாபாரி சின்னத்துரை மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கருணாபுரத்தில் 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை தீவிரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்குமூலம்
இந்நிலையில், தனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இறந்த கோர சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியான கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை. கோவிந்தராஜனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால் அவரது தம்பி தாமோதரனே எப்போதும் சிறிதளவு குடித்து பார்த்து வாங்குவார்.
முதல்முறையாக முன்பணம் மட்டுமே பெற்றுக்கொண்டு மெத்தனாலை விற்பனை செய்து விட்டு சின்னத்துரை கிளம்பியுள்ளார். சின்னத்துரை மெத்தனாலை மாதேஷ் என்பவரிடமிருந்து பெற்றதும், மாதேஷ் ஆந்திர கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சின்னத்துரை அளித்த தகவலின் பேரில் புதுச்சேரியை சேர்ந்த மாதேஷை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். சின்னத்துரையின் நண்பர்களான மதன்குமார், ஜோசப் ராஜா ஆகியோரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
மதன்குமார் கடந்த 2023ல் எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் விற்பனை செய்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
குடித்து பார்த்து வாங்கப்பட்ட மெத்தனால் வாங்கிய சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. மேலும் கருணாபுரத்தில் விற்கப்பட்ட விஷ சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் ஆந்திரா, சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வாங்கப்பட்டது.
உயிரிழந்தவரின் உறவினர்கள் பகிர்ந்த முக்கிய தகவல்
ஜூன் 17-ல் மாதேஷ் என்பவரிடம் இருந்து மெத்தனாலை சின்னதுரை வாங்கியுள்ளார். சின்னத்துரையிடம் இருந்து மெத்தனாலை குடித்துப் பார்த்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் வாங்கியுள்ளார். மெத்தனாலை குடித்துப் பார்த்து விட்டு கெட்டுப் போய்விட்டதாக கோவிந்தராஜன் மற்றும் சின்னத்துரையிடம் தாமோதரன் கூறியுள்ளார்.
உயர்தர சரக்கு எனக்கூறி விற்பனை செய்யச் சொல்லி கோவிந்தராஜன் மற்றும் தாமோதரனிடம் மெத்தனாலை சின்னத்துரை விற்பனை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது.
"சாதாரணமாக நாளில் ஒரு பாக்கெட்டு 60 ரூபாய் தான். டாஸ்மாக் கடை லீவு என்றால் விலையை ஏற்றிவிடுவார்கள் என்றும், அவர்களின் குடும்ப தொழிலாக இதனைச் செய்து வருகிறார்கள். கடந்த 4 வருடமாக அவரே காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்." என்று கள்ளக்குறிச்சியில் நடக்கும் கள்ளச்சாராய விற்பனை பற்றி உயிரிழந்தவரின் உறவினர்கள் பகிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.