கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளது.
வட தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 100-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பெரும்பாலானோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு சிலர், பாண்டிச்சேரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 65-க்கு அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கள்ளக்குறிச்சிக்கு அருகில் உள்ள கல்வராயன் மலையில் தான் சாராயம் அதிகம் காய்ச்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழக்கறிஞர் தமிழ்மணி அளித்த பேட்டியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகிய இருவரும் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளனர். கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லாததால் தான் அவர்களுக்கு சாராயம் காய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் தலையிட்டோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலாளர், தமிழக டி.ஜி.பி, மத்திய மற்றும் மாநில பழங்குடியின அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பதில் அளிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“