கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. 100-க்கு மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச் சாராயம் அருந்திய மேலும் பலர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி வருகை காரணமாக மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சற்று நேரம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிகமானோர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்த பகுதி கள்ளக்குறிச்சியின் மையப்பகுதி ஆகும். இதற்கு மிக அருகில் காவல்நிலையம் இருக்கிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். ஆனாலும் இங்கே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இது மக்கள் இடத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்கள் அனைவருமே காலனியை சேர்ந்தவர்கள், ஏழைகள். ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு துணிச்சலாக காவல்நிலையத்திற்கு அருகில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுமா? என்று தெரியவில்லை.
சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்ந்து உயிரிழப்பது வேதனையை அளிக்கிறது. இதற்கு முன்பு செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தார்கள். அப்போதும் நான் சொன்னேன் கள்ளச்சாராயம் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதும் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொல்லி வழக்கை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைத்தார். அந்த வழக்கு இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் மாவட்ட கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானமும் சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போதே கவனயீர்ப்பு தீர்மானத்தை முழுமையாக கையாண்டிருந்தால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்திருக்க வாய்ப்பிருக்காது. காவல் நிலையம் அருகிலே சாராயம் விற்பனை நடக்கிறது என்றால், ஆட்சி அதிகாராம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் இருக்கிறது. ஏழை மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு தி.மு.க. வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரின் செயலற்ற தன்மையே இந்த பேரிழப்புக்கு காரணம். விசசாராயத்திற்கு பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க ஏற்கும், அந்தக் குடும்பத்திற்கு 5000 நிதி உதவியையும் அ.தி.மு.க வழங்கும்." என்று அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு!https://t.co/gkgoZMHWlc | #EdappadiPalanisamy | #ADMK | #Kallakurichi #Illicitliquor | @EPSTamilNadu | 📹@rajaviscom pic.twitter.com/aezkNx5odB
— Indian Express Tamil (@IeTamil) June 20, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.