தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரம் பெரும் சர்சசையை கிளப்பியுள்ளது. இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக சென்னை ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை சா்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் தொடர்பான, தேசிய அளவிலான விழிப்புணர்வு செயல்பாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்; ”கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்தது ஓா் இருண்ட சம்பவம். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
இந்த சம்பவம் மிகுந்த வலியைத் தருகிறது. போதைப் பொருட்களின் தாக்கம் போகப்போக மிகவும் மோசமாகி வருகிறது. போதையின் முக்கிய இலக்கே, இளைஞர்கள்தான்.
தமிழகத்தில் என்னை சந்திக்கும் பெற்றோர், உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் அதிகளவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகவும், இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். இதை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மன நிலையில் அரசு இல்லை.
கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் புழக்கத்தால் தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருளுக்கு இளைஞா்கள் அடிமையாவதன் மூலம் பல குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன. போதை பொருட்கள், கள்ளச்சாராய பயன்பாட்டை தடுக்காவிட்டால் மாநில எதிர்காலம் பாதிக்கப்படும்.
பொதுமக்கள் உயிருடன் நாம் விளயைாடக்கூடாது. போதை விநியோகத்தை கட்டுப்படுத்துவது அமலாக்க துறையினர் கையில்தான் உள்ளது.
செயற்கை போதைப் பொருட்கள் பள்ளி பகுதிகளில் சிறு பாக்கெட்களில் கிடைக்கிறது. ஆனால், அமலாக்கத் துறையினரிடம் கேட்டால் பறிமுதல் ஏதும் இல்லை என்கின்றனர்.
இது மிகவும் வேதனைக்குரியது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நான் என்ன செய்ய வேண்டுமோ அந்த உதவிகளை செய்கிறேன். இதில் எந்த ஒரு அரசியலும் இல்லை.
போதைப்பொருள் குறித்த தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில், தமிழகத்துக்கு பாகிஸ்தானின் கராச்சி, துபாயில் உள்ளவர்கள் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருள் வரவழைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. கேரள கடல் பகுதியில் ஹெராயின் பிடிபட்ட நேரத்தில் அவா்களிடம் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் இருந்தன. இது மோசமான நிலையாகும்
இந்த விஷயத்தில் நாம் கண்ணை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. இதில் கட்சி, அரசியல் எதுவும் நுழையக்கூடாது. போதைப் பொருள் விநியோகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”, என்றார் ஆளுநா் ஆா்.என்.ரவி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“