கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி விஷச் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரும் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். இதனால், பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. கள்ளச்சாராயம் குடித்து 230 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 68 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மற்றவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் - வடிவுக்கரசி தம்பதி உயிரிழந்தனர். இதனால் அவர்களின் ஒரு மகள் (கோகிலா), 2 மகன்கள் (ஹரிஷ், ராகவன்) பெற்றோர் இன்றி தவித்து வருகின்றனர். இதில் கோகிலா பிளஸ் 1 படித்து வருகிறார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு பணிக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சவுந்தர் ஆகியோர் சென்றனர். அப்போது பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவி கோகிலா, மாணவர்கள் ஹரிஷ், ராகவன் ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்படி நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, பள்ளியில் இருந்து அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பள்ளி சீருடையில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்தனர். அப்போது, அவர்கள் 3 பேருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிபதி சவுந்தர் ஆறுதல் கூறினர். மேலும் புத்தாடைகள், பள்ளி சென்று வர வசதியாக சைக்கிளும் வழங்கினர்.
இதன்பிறகு, நீதிபதிகள் ‛‛தற்போது நீங்கள் என்ன படித்து வருகிறீர்கள்? எதிர்கால குறிக்கோள் என்ன?’’ என்று கேள்வி கேட்டனர். அதற்கு கோகிலா, ‛‛நான் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். இன்ஸ்பெக்டராக வர விரும்புகிறேன்’’ என்றார். இதேபோல் ஹரிஷ், ‛‛நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். அட்வகேட் ஆக விரும்புகிறேன்’’ என்றார்.
மேலும் ராகவன், ‛‛நான் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். படிப்பை முடித்துவிட்டு ஐ.டி.ஐ படிக்க இருக்கிறேன்’’ என்று தங்களின் ஆசைகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சவுந்தரிடம் தெரிவித்துள்ளனர். அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த நீதிபதிகள் 3 பேருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ‛‛நீங்கள் மனதளராமல் படிக்க வேண்டும்’’ என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.