தமிழ்நாட்டில் விஷச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 184 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதில் இன்று காலை நிலவரப்படி 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சட்டப்பேரவையில் நேற்று (ஜூன் 21) கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பான கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய ஸ்டாலின், கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து நிலையில், கள்ளக்குறிச்சி போன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதும் மிகவும் வேதனைக்குரியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது பாரபட்சமின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க, மாவட்ட காவல் துறையுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய்த் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரையில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள் மீது 4.63 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.61 லட்சம் போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுவரை 565 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கள்ளச்சாராயத்தில் முக்கியமாக மெத்தனால் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மாநிலத்திலுள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தி அலகுகள், பயன்படுத்துபவா்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற ஆலைகளைத் தணிக்கை செய்ய மாவட்ட எஸ்பிக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா், என்றார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் மற்றும் விஷச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில் விஷச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“