கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கனகு மகன் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கனகுவின் மற்றொரு மகன் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் கள்ளச்சாராயம் அருந்திய பலரில் இதுவரை5 பெண்கள் உள்பட 35 பேர் இறந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளச்சாரயம் மரணம் தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் கண்காணிப்பாளர் உள்பட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த், புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர்.
சாராயம் அருந்தி பலர் இறந்த வழக்கை தீர விசாரிக்கவும் உரிய மேல் நடவடிக்கை எடுக்கவும் அந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக எடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக, விசாரணை அதிகாரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான கோமதி, சென்னையில் இருந்து சென்ற டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாக கூறப்படும் கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி போலீஸார், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உள்ளூர் போலீஸார் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் அவசர அலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“