கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் நாட்டு சாராயம் குறித்து பலர் உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் 70க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.
ஏற்கனவே விழுப்புரத்தில் இதே போல் சம்பவத்தில் 23 பேர் பலியாகி, ஒரு வருடம் கூட முடியவில்லை. கலெக்டர், எஸ்பி சஸ்பென்ட் செய்யப்பட்டது ஆக்கபூர்வமான நடவடிக்கையாக தெரியவில்லை..
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சட்டவிரோத மதுவை விற்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற சம்பவங்களை நடத்துகின்றனர். ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு தெரியாமல் கள்ளச் சாராய வியாபாரம் நடக்க வாய்ப்புகள் இல்லை.
கலெக்டர், எஸ்பி மீது பழியை போட்டு விட்டு முதலமைச்சர் தப்பிக்க நினைக்க கூடாது. இதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். தானாக முன் வந்து அரசு பதவியில் இருந்து இறங்க வேண்டும்.
பால் பாக்கெட் போல சாராயம் வீடு வீடாக சென்று விற்க்கபட்டுள்ளது. தமிழகத்தில் நிரந்தரமாக பூரணமாக மதுவிலக்கை அமுல்படுத்த இது தான் சந்தர்ப்பம். மதுவே இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
அதேபோல பள்ளிகளில் சாதிய வேறுபாடுகளால் நடக்க கூடிய சம்பவங்களை தடுக்க வேண்டும். நீதிபதி சந்துரு பொட்டு வைப்பதை குறிப்பிடவில்லை, பச்சை சிவப்பு என சாதி ரீதியான பொட்டு வைப்பதை தான் அவர் சொல்கிறார்.
பள்ளியில் வருகை பதிவேட்டில் சாதி இருக்க கூடாது, ரகசியமான அறையில் தான் இருக்க வேண்டும்.
சட்டத்தை அமலாக்கக் கூடியவர்கள் சரியாக இருந்தால் சரியான சட்டத்தை ஏற்படுத்தலாம். போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது தான் புதிய தமிழகத்தின் லட்சியம்’ இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“