கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்தகைய குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் காலனியை சேர்ந்த 26 நபர்கள் புதன்கிழமை (ஜூன் 19) காலையில் திடீரென வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்தது தெரியவந்தது. பாக்கெட்டுகளில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததால் அனைவரும் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிய வந்தது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு தொடங்கியது. பிரவீன் குமார் (வயது 26), சுரேஷ் (40), சேகர் (59), இந்திரா, மணிகண்டன் உள்பட இது வரை 18 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும், 80 பேர் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை உயருமோ என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே, கள்ளச்சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கத் தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என சூளுரைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) June 19, 2024
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள்… pic.twitter.com/QGEYo9FWJq
இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என கூறியுள்ளார்.
இதனிடையே, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்தனர்.
பின்னர் அமைச்சர்கள் இருவரும் கூட்ட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை என அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
“கள்ளக்குறிச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. மெத்தனமாக செயல்பட்டதால் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.