கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 184 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதில் இன்று காலை நிலவரப்படி 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்டமாக கள்ளச் சாராயம் விற்றதாக கருணாபுரம் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டியைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரது மனைவி விஜயா, சகோதரர் தமோதரன் மற்றும் விஜயாவின் சகோதரி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர், கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம் முன்னிலையில் 4 பேரையும் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கள்ளச் சாராய மொத்த வியாபாரி சின்னதுரை, ஜோசப் (எ) ராஜா, மாதேஷ் மற்றும் கல்வராயன்மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சிய 20 பேரிடம் போலீஸார் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வராயன் மலையில் மூலிகைச் சாராயம் எனப்படும் கடுக்காய் சாராயம் கள்ளகுறிச்சிக்கு கொண்டு வரப்பட்டு, போதை கூடுதலாக கிடைக்க மெத்தனால் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டதால்தான் இச்சம்பவம் நடைபெற்றது என்று தெரியவந்துள்ளது.
கள்ளகுறிச்சியில் முதன்முதலில் கள்ளச் சாரயம் குடித்து உயிரிழந்த பிரவின் இறப்புக்கு சென்றபோது அங்கு குடித்த கள்ளச் சாராயமே பலரின் உயிருக்கு எமனாகியுள்ளது
இதற்கிடையில், உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சென்று, அங்குள்ள குழந்தைகள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“