கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் இருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு மருத்துவக் குழு கள்ளக்குறிச்சியில் முகாமிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காகவும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாகக் கூறப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன.
இது தீவிர கவலைக்குரிய விஷயம்” என ஆளுநர் அதில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“