கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அவர்கள் பத்திரமாக கள்ளக்குறிச்சி திரும்பியதாக கள்ளக்குறிச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பெட்டாலியன் போலீசார் உள்ளிட்ட போலீசார், சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 போலீசாரில் 13 பேர், உணவு சாப்பிட, வனப்பகுதியை விட்டு வெளியேறினர். மீதமுள்ள 7 போலீசாரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால் போலீசார் அச்சமடைந்தனர்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை அதனை மறுத்தது. “கரியலூர் கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற 7 போலீஸார் மாயம் என்ற செய்தி பரவி வருகிறது. மேற்படி 7 நபர்கள் சாராய வேட்டை முடித்து ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்துள்ளனர். அனைவரும் இருப்பிடம் திரும்பி விட்டனர். அனைவரும் நலமாக உள்ளனர். தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் நலமுடன் திரும்பிய தகவல் அறிந்து திருச்சி போலீசாரும் நிம்மதி அடைந்தனர்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் ஊரில் கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளச் சாராயம் அருந்தியதில் பலர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகினர். தற்போதுவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை செய்துவரும் போலீசார், இதுவரை 12 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், கல்வராயன் மலையில் முகாமிட்டிருக்கும் போலீசார் சாராய வியாபாரிகளை கைது செய்வதுடன் ஊரல்களையும் அழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“