தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து அண்ணா திமுக எம்.எல்.ஏக்கள் கறுப்புச் சட்டையுடன் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நேற்றைய தினம் காலை 10 மணிக்கு கூடிய சட்டப் பேரவையில் மறைந்த எம்.எல்.ஏக்களுக்கும், குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21.06.2024) காலை இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை), மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் பேசலாம் எனவும் சபாநாயகர் அப்பாவு அனுமதித்தார். ஆனாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இதனை ஏற்க மறுத்து கடு அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களையும் சபையில் இருந்து உடனே வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதனடிப்படையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சபையில் இருந்து குண்டுகட்டாக சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
தர்ணாவில் ஈடுபட்டவர்கள் ‘பதவி விலகுங்கள் ஸ்டாலின்’ என்று எழுதப்பட்ட காகிதத்தைக் காண்பித்து முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; “எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளன.
நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம் ஆனால் இது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேரவை தலைவர் அப்பாவு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எங்களை பேசவிடவில்லை. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்கவில்லை.
கள்ளச்சாராயம் அருந்தி தான் உயிரிழந்தார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்திருப்பார்கள்” என்றார்.
முன்னதாகக் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“