கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ள நிலையில், 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருணாபுரம் வந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தநிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் நிலவரம் குறித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை மொத்தம் 48 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழப்புகளைப் பொறுத்தவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பெண்கள், 42 ஆண்கள் மற்றும் ஒரு திருநங்கை அடங்குவர்.
சிகிச்சை பெற்று வருபவர்களைப் பொறுத்தவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 85 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பெண்கள் மற்றும் 129 ஆண்கள் அடங்குவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“