கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேருக்கு 2 நாள் சி.பி.சி.ஐ.டி காவலுக்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 100-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பெரும்பாலானோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு சிலர், பாண்டிச்சேரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 65-க்கு அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. அதே போல் இந்த வழக்கு தொடர்பான நாள் தோறும் அதிர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 40-க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே கள்ளச்சாராய வழக்கில், கன்னுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் என 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், 11 பேர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுளள்னர்.
இதனிடையே வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த 5 நாட்கள் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“