/tamil-ie/media/media_files/uploads/2021/11/Kuravas.jpg)
கடலூர் மாவட்டத்தில் 1990களில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக கைது செய்து, காவல் நிலைய சித்திரவதையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் தற்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்த குறவர் சமூகத்தினரை திருட்டுக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இனக் குறவர் சமூகத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கடந்த நவம்பர் 14ம் தேதி தனது கணவர் பிரகாஷ் மற்றும் உறவினர் தர்மராஜ் இருவரையும் குற்றப்பிரிவு சிறப்பு போலீஸார் நள்ளிரவில் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுவரை அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடயே மீண்டும் ஊருக்குள் வந்த காவல் துறையினர் புவனேஸ்வரி - பிரகாஷ் தம்பதியின் உறவினர்களான பரமசிவம் (42), சக்திவேல் (29) ஆகிய மேலும் இருவரையும் வேனில் அழைத்துச் சென்றதாக புவனேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, பிரகாஷ், தர்மராஜ் ஆகியோர் நேற்று (நவம்பர் 18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்றாவது நபரான சக்திவேல் பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் தற்போது அவர் விழுப்புரம் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் கூறியதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் போலீஸார் எப்படி தங்களை சித்திரவதை செய்தார்கள் என்பதை குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், தில்லை நகரைச் சேர்ந்த பட்டியல் இனக் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கள்ளக்குறிச்சி போலீசாரால் வாரண்ட் இல்லாமல் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றுள்ளனர். போலீசார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவர்கள் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
ஆனால், இந்த விவகாத்தில் போலீஸார் கூறுகையில், திருட்டுக் குற்றத்தில் மூன்று பேரின் கைரேகை பொருந்துகிறது என்றும் மற்ற 2 பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். ஆனால், மற்றவர்கல் விடுவிக்கப்படவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் குறவர் பழங்குடி சமூகத்தினர் 5 பேரை பொய் வழக்கில் கைது செய்தனர்.இருவர் விடுவிக்கப்பட்டனர்.
— வன்னி அரசு (@VanniArasu_VCK) November 17, 2021
விடுவிக்கப்பட்ட கொங்கரம்பாளையம் செல்வம் (48), காவல்துறையின் வன்முறை பற்றி விவரிக்கிறார்.
அப்படியே
#ஜெய்பீம் படத்தை நினைவு படுத்துகிறார்.@CMOTamilnadu pic.twitter.com/DBN6JzwVIx
தர்மராஜ் மற்றும் பிரகாஷ் இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் போலீசார் சக்திவேலை நெஞ்சுவலி என்று கூறி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், சின்ன சேலம், கொங்கரம்பாளையம் செல்வம் (48) என்பவர் காவல்துறையின் வன்முறை பற்றி கூறியிருப்பது அப்படியே ஜெய் பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற காவல் நிலைய சித்திரவதையை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.
போலீசார் கண்களைக் கட்டி அழைத்துச் சென்றதாகவும், கம்பால் அடித்து சித்திரவதை செய்ததையும் கூறுகிறார். மேலும், இரண்டு கைகளிலும் கட்டவிரலில் கயிறு கட்டி தொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்தார்கள் என்பதை நடுக்கத்துடன் கூறுகிறார். செல்வம் கூறுவது அப்படியே ஜெய் பீம் திரைப்படத்தில் நடக்கும் போலீஸ் சித்திரவதை செய்யும் கட்சியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதில் வழிப்பறி, கொள்ளை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக 3 பேரின் கை ரேகைகள் ஒத்துப்போகின்றன. மற்ற இரண்டு பேர்கள் செல்வம், பரமசிவம் இருவரையும் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டோம்.
பிடிபட்டவர்கள் சின்ன சேலம், கீழ் குப்பம், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.