கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து வெளியாகியுள்ள இரண்டு சிசிடிவி வீடியோ காட்சிகள் குறித்து ஊடகங்களில் பேசியுள்ள மாணவியின் தாயார் செல்வி கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக, புதிய சிசிடிவி வீடியோ கிளிப்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடியோ காட்சியில் மாணவி ஸ்ரீமதி அந்த பள்ளியின் வகுப்பறையில் ஜூலை 12 ஆம் தேதி இரவு 9.28 மணிக்கு நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. மற்றொரு விடியோ காட்சியில், ஜூலை 13 ஆம் தேதி காலை 5.23 மணிக்கு கீழே விழுந்து கிடந்த ஸ்ரீமதியின் உடலை ஆசிரியைகள் தூக்கிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு சிசிடிவி வீடியோ காட்சிகளும் மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து ஊடகங்களில் பேசியுள்ள அவருடைய தாயார் செல்வி கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோக்கள் குறித்து மாணவி ஸ்ரீமதியின் தயார் செல்வி ஊடகங்களில் கூறியதாவது: “நாங்கள் முதல் நாள் 13 ஆம் தேதியே ஸ்ரீமதி எப்படி விழுந்து உயிரிழந்தார். அந்த வீடியோவைக் காட்டுங்கள் என்று கூறினோம். அவர்கள் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துக்கொண்டு போய் இரவு 10.30 மணிக்கு ஒரு நொடி நேரம் உள்ள வீடியோவைத்தான் காட்டினார்கள். உண்மையிலேயே, இந்த சம்பவம் நடந்திருக்கு, வீடியோக்கள் அவர்களிடம் இருக்கிறது; இது உண்மை சம்பவம் என்றால், எங்களுக்கு 14 தேதி கூட முழு வீடியோவைக் காட்டியிருக்கலாம். நாங்கள் 4 நாள் வரைக்கும் நாங்கள் என்ன கேட்டோம் என்றால், அந்த சம்பவத்தின் வீடியோக்களைக் காட்டுங்கள் என்பதைத்தான் கோரிக்கையாக வைத்தோம். ஆனால், 22 நாள் கழித்து எங்கிருந்து இந்த வீடியோக்கள் வருகிறது.” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமதி ஜூலை 10 ஆம் தேதி காலை 8.10 மணிக்கு பள்ளியில் இருந்து கடைசியாக போனில் பேசினார். நல்லா இருக்கிறேன் என்று சந்தோசமாக இருக்கிறேன் என்று பேசினார். என்னுடைய கேள்வியும் இதுதான். 9.30 மணி வீடியோவைக் காட்டுகிறார்கள். காலையில் 5.30 மணிக்கு தூக்குகிற வீடியோவைக் காட்டுகிறார்கள். முழு வீடியோவை காட்டினால் அதைப் பார்ப்பதற்கு எங்கள் தரப்பில் நாங்களோ எங்களைச் சேர்ந்தவர்களோ வரத் தயாராக இருக்கிறோம். இப்போதே இந்த நிமிஷமே வரத் தயாராக இருக்கிறோம்.
முதல் நாளில் இருந்து ஸ்ரீமதி மாடியில் எங்கே போனாள் வந்தாள், உட்கார்ந்தாள், சாப்பிட்டாளா, எங்கேயிருந்து குதிக்கப்பட்டாள் என்பதை இரவு முழுவதும் எப்படி துடித்தாள். யார் ஓடி வந்து முதலில் பார்த்தார்கள். பார்த்தவர்கள் எவ்வளவு அலறினார்கள். அந்த அலறலைக் கேட்டு எத்தனை பேர் ஓடிவந்தார்கள் என்கிற முழு வீடியோவை காட்ட அவர்கள் தயார் என்றால் நாங்கள் தயார். பார்ப்பதற்கு இந்த நிமிஷமே வருகிறோம்.
ஸ்ரீமதி அந்த வீடியோவில், 9.30 மணிக்கு போகிறாள். எல்லோரும் சாப்பிட்டு தூங்குவதற்கு நேரமாகும். 10.30 மணிக்கு விழுகிறாள் என்றால், சாதாரணமாக பாத்ரூமில் வழுக்கி விழுந்தாலே வலியில் எவ்வளவு கத்துவோம். 10.30 மணிக்கு விழுகிற குழந்தை எவ்வளவு கத்தியிருப்பாள். அப்போது அந்த நேரத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்களா? ஏன் யாரும் ஓடி வந்து பார்க்கவில்லை. மாடி மேலே இருந்து குதிக்கிற பெண் எவ்வளவு சத்தம் போட்டிருப்பாள். அப்போது யாரும் ஏன் பார்க்கவில்லை. இது ஸ்ரீமதி குதித்தது கிடையாது.
சிபிசிஐடி போலீசார் முதல் நாள் என்ன நடந்தது என்ற தகவலை சேகரித்தார்கள். புதன்கிழமை சிபிசிஐடி போலீசார் வந்து ஸ்ரீமதி எழுதிய நோட்டை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சிபிசிஐடி போலீசார் எங்களிடம், நீங்கள் ஸ்ரீமதியிடம் எப்போது போன் பண்ணி பேசினீர்கள். பள்ளியில் இருந்து எத்தனை மணிக்கு போன் பண்ணார்கள். நீங்கள் எத்தனை மணிக்குப் போய் பார்த்தீர்கள். உங்களுக்கு சிசிடிவி வீடியோவைக் காட்டினார்களா? எவ்வளவு நேரம் வீடியோவைக் காட்டினார்கள். ஸ்ரீமதி விழுந்த இடத்தைக் காட்டினார்களா? அந்த இடத்தில் ரத்தம் இருந்ததா? என்பது போன்ற கேள்வியை எல்லாம் கேட்டார்கள் என்று கூறினார்.
மேலும், பள்ளி தரப்பில் ரவிக்குமார்தான் ஸ்ரீமதியை வேனில் ஏற்றிக்கொண்டு போனதாகக் கூறினார்கள். அப்போது ரவிக்குமார் எங்கே இருத்தார்? சம்பவ இடத்தில் இருந்தாரா? சாந்தி மேடம் சம்பவ இடத்தில் இருந்தார்களா? இது எல்லாம் ஏன் கவர் ஆகவில்லை. அவர்கள் என்னிடம் சொன்னது என்றால், நான் தான் விழுந்துகிடந்த ஸ்ரீமதியைத் தூக்கினேன். நான் தான் தூக்கி வண்டியில் ஏற்றிவிட்டேன் என்று என்னிடம் சொன்னார்கள். ரவிக்குமார்தான் வண்டியை ஓட்டிக்கொண்டு போனதாகவும் பாதி தூரத்தில்தான் வண்டியை ஓட்டுவதற்கு டிரைவரை மாற்றியதாகவும் சொல்கிறார்கள்.
அன்றைக்கு பள்ளியில் இருந்து முதல் போன் கால் சாந்தி மேடம் 6.20 மணிக்குதான் பண்ணியிருந்தார்கள். முதலில் ஸ்ரீமதி விழுந்துவிட்டாள். உயிரோடு இருக்கிறாள் என்ற தகவல்தான் சொன்னார்கள். பிறகு, நாங்கள் நேராக அரசு மருத்துவமனைக்குதான் போனோம். இடைப்பட்ட அரை மணி நேரத்துக்குள் அறிமுகமில்லாத ஒரு நபர் போன் செய்து ஸ்ரீமதி இறந்துவிட்டாள் என்ற செய்தியை சொல்கிறார்கள்.
இந்த வீடியோவில், ஸ்ரீமதியைத் தூக்கிக்கொண்டு போகும்போது பாருங்கள், கழுத்து எல்லாம் சாய்ந்த நிலையில் இருக்கிறாள். ஏதோ ஆடு மாடு தூக்கிக்கொண்டு போவது போல தூக்கிப் போகிறார்கள். அப்போதே ஸ்ரீமதி இறந்துவிட்டிருக்கிறாள். எனக்கு ஸ்ரீமதி இறந்துவிட்டாள் என்று 7.00 மணிக்கு சொன்னார்கள். முதலில் ஸ்ரீமதி விழுந்துவிட்டாள் என்று சொன்னார்கள். பிறகு, 7 மணிக்கு இறந்துவிட்டாள் என்ற செய்தியைச் சொன்னார்கள். 5.15 மணியில் இருந்து 7 மணி வரைக்குமா ஒரு பெண் இறந்துவிட்டாள் என்ற தகவலை சொல்லாமல் இருப்பார்கள். அங்கேயே, பள்ளி நிர்வாகம் எவ்வளவு பொய் சொல்கிறது என்ற விஷயம் தெரிகிறது. 5.30 மணிக்கு இறந்துவிட்ட பெண்ணை உயிரோடு இருக்கிறாள் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீமதியின் தாயார் செல்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் ஸ்ரீமதியை தூக்கிச் செல்பவர்கள் யார் என்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஸ்ரீமதி விழுந்ததையோ, அவள் துடித்ததையோ வீடியோவில் காட்டவில்லை. வெறுமனே தூக்கிக்கொண்டு போவதைக் காட்டினால், என்ன என்று சொல்வது, கொலை செய்தாலும் தூக்கிக்கொண்டுதான் போவார்கள். தற்கொலை பண்ணிக்கொண்டாலும் தூக்கிக்கொண்டுதான் போவார்கள். தூக்கிக்கொண்டுதான் போய் வேனில் ஏற்ற முடியும். ஸ்ரீமதியே நடந்துபோய் வேனில் உட்கார முடியுமா? தூக்கிக்கொண்டு போகிற இடம் கூட எங்களிடம் சொல்லி காட்டிய இடம் இல்லை. மாறுபட்ட இடத்தில் இருந்து தூக்கிக்கொண்டு வருகிறார்கள்” என்று ஸ்ரீமதியின் தாயார் செல்வி சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
ஸ்ரீமதி இறப்பதற்கு முன் பள்ளியில் இருந்து போனில் பேசியபோது, பள்ளியில் ஏதும் சிரமம் இருப்பது போல எதுவும் பேசவில்லை. இந்த சிசிடிவி கேமிரா வீடியோ எல்லாம் அப்பட்டமான பொய். சம்பவத்தைக் காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், உண்மையான தகவல் வெளியே வரவேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால், முதல் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை பதிவான வீடியோக்களை காட்ட வேண்டும். அடுத்தது, நுழைவாயில் காட்ட வேண்டும். யார் தூக்கிக்கொண்டு போனார்கள். எந்த நம்பர் வேனில் ஏற்றினார்கள். அந்த டிரைவர் யார்? வேன் உள்ளே யார் யார் உக்கார்ந்திருந்தார்கள்? யார் மடியில் ஸ்ரீமதி கிடத்தப்பட்டிருந்தாள். அவர்கள் ஆடையில் எவ்வளவு ரத்தக் கறை இருந்தது. எல்லாவற்றையும் வீடியோவாக இன்றைக்கே வெளியிடச் சொல்லுங்க.
இது சம்பந்தமாக ஸ்ரீமதி உடன் படித்த மாணவிகள் யாரிடமும் பேச முடியவில்லை. அவர்களுடைய பெற்றோர்கள்தான் பேசுகிறார்கள். மாணவிகள் யாருமே பேசமாட்டங்கிறார்கள். ஸ்ரீமதி விழுந்ததாக அவர்கள் சொன்ன இடத்துக்கும் வீடியோவில் அவர்கள் ஸ்ரீமதியை தூக்கிக்கொண்டு வருகிற இடத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் சொன்ன இடத்தில் இருந்து 20 அடி அப்பால் இருந்துதான் தூக்கி வருகிறார்கள். அவர்கள் வேறு எங்கோ கொலை செய்து போட்டுவிட்டுதான் தூக்கி வருகிறார்கள்.” என்று ஸ்ரீமதியின் தாயார் சந்தேகங்களை எழுப்பி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.