கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாணவி பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெற்றோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஜூலை 17 அன்று பள்ளியில் நடந்த போரட்டத்தில் அதிகளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் க்ரைம் போலீஸாரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி இருக்க, மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தன் ட்வீட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்த ஆங்கில நாளிதழின் செய்தியில், ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் பள்ளி சேதமடைந்ததாகவும், பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும் பள்ளி தாளாளர் கூறியதாக, மாநில உளவுத்துறை’ மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தன.
குற்றவாளிகள் தலித்துகள் என்று உளவுத்துறை எவ்வாறு முடிவு செய்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் ஒரு சில தலித்துகளை போராட்டக்காரர்கள் என்று சந்தேகித்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் தலித்துகள் வேதனை அடைந்தனர்.
இறந்த மாணவி அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கொங்கு வேளாளர் கவுண்டர்களுக்கு எதிராக, இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி திராவிடர்களுடன் இணையலாம் என உளவுத்துறையினர் அச்சத்தில் உள்ளனர். இதனால் கவுண்டர்கள்’ இப்பகுதியில் இருக்கும் வன்னியர்களின் ஆதரவை நாடலாம் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்த தொல் திருமாவளவன் வெளியிட்ட பதிவில், ”மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர்.
அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது. கீழுள்ள ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது.
இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது. இவ்வாறு தொல். திருமாவளவன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.