கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், கடுமையான வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. கிராமத்தில் 150க்கும் மேற்பட்டோர் இந்த விஷச்சாராயத்தை குடித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இன்று (ஜுன் 23) காலை நிலவரப்படி 57 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, உயர் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும், பணியிட மாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சி.பி.சிஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், மெத்தனால் போன்றவை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 800க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு 4000 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் என்ற முக்கிய குற்றவாளியை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிவகுமாரை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய அருந்திய விவகாரத்தில் தற்போது 140க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“