தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், கேள்வி பதில் உள்பட சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயம் குடித்து தற்போது வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப் பேரவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. அ.தி.மு.கவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜுன் 26) சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை தொடங்கியதும் அ.தி.மு.கவினர் இந்த விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அ.தி.மு.கவினர் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்துக்கு பின் பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு கூறிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது பேசிய துரைமுருகன், “பிரச்சினையை சட்டப்பேர்வையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி உள்ளோம். கறுப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க உறுப்பினர்களை சபாநாயகர் அப்பாவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“