கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரம் தொடர்பாக தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் எனக் கூறி அ.தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (ஜுன் 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 55-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததற்கு காரணமான தமிழக விடியா திமுக அரசை கண்டித்தும், கள்ளச்சார புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய கையாளாகாத தனத்தை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கூறி, புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் பேசுகையில், ஒரு மாநிலத்தில் ஆட்சி நடத்துகின்ற எந்த அரசாக இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசு மக்களை பற்றி சிந்திக்காத அரசாக இருப்பதால் கள்ள விஷ சாராயம் அருந்தி ஆண்டு தோறும் பல அப்பாவி மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ள விஷ சாராயம் அருந்தி 23-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். அதே போன்று கடந்த 4 தினங்களுக்கு முன்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள விஷ சாராயம் அருந்தி சுமார் 55-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆங்காங்கே இருக்க கூடிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இன்னும் சிலரின் உயிர்கள் பிரியும் தருவாயில் இருப்பதாக வரும் தகவல்கள் நெஞ்சை உளுக்குவதாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே விற்பனை செய்யப்படும் கள்ள சாராயம் விற்பனை என்பது அரசுக்கும் அந்தந்த பகுதியில் இருக்க கூடிய காவல்துறைக்கும் தெரிந்தே விற்பனை செய்யப்படுகிறது. ஆளும் திமுக அரசின் ஆதரவோடு விற்பனை செய்யப்படுவதால் பல இடங்களில் காவல்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர். இது போன்று காவல்துறையினரின் அலட்சியத்தால் சில நேரங்களில் கள்ள சாராயம் விற்பனை விஷ சாராய விற்பனையாக உருமாறி மனித உயிர்களை காவு வாங்குகிறது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த துயர சம்பவத்திற்கு தமிழகத்தை ஆளும் திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முழு பொறுப்பேற்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்தியதால் பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் மற்றும் தமிழக கலால்துறை அமைச்சர் மற்றும் தமிழக காவல்துறை அமைச்சர் ஆகியோர் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர், இந்த சாராயம் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும், ஆந்திராவில் இருந்து தொழில்சாலைகளுக்கு கொண்டுவரப்பட்ட மெத்தனால் என்றும் சட்டமன்றத்தில் உண்மையை மூடி மறைக்கின்ற விதத்தில் ஆதராமற்ற குற்றச்சாட்டை கூறினார்.
இந்த சம்பவத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தமிழக முதலமைச்சர் கூறுவது உண்மை என்றால் இதன் விசாரணையை சிபிஐக்கு விடுவதுதான் சரியான ஒன்றாகும். அதை தான் எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்கள் தமிழக திமுக ஆட்சியில் நடைபெற்ற மனதை உலுக்கும் இந்த சட்டவிரோத சம்பவத்தை தமிழக சிபிசிஐடியே விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாம் என சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடு ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. அவர்கள் என்ன விசாரிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படி கலக்கினார்கள், எப்படி குடித்தார்கள் என விசாரிக்க போகிறார்களா?
அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியதோடு 55-க்கும் மேற்பட்ட நபர்கள் மரணமடைந்த இந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களும், திமுகவின் கூட்டணி கட்சிகளும் வாய் திறக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்கி ஆளும் விடியா திமுக அரசுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர். புதுச்சேரியில் பல கட்சிகளில் உள்ள வாய்ச்சொல் வீரர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.
விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே புதுச்சேரி மாநிலத்தின் மீது திசை திருப்பும் நோக்கோடு இந்த விஷ சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்டதாக தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிக்கிறார். அதையே புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.வைத்திலிங்கம் அவர்களும் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட மரணத்திற்கு புதுச்சேரி அரசுதான் காரணம் என அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
புதுச்சேரி மக்கள் வாக்களித்து தான் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பதை மறந்துவிட்டு, கூட்டணி கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்காக புதுச்சேரி மக்களை அவமானப்படுத்திவிட்டார். கள்ளக்குறிச்சியில் மக்கள் உயிரிழப்புக்கு புதுச்சேரி மாநில அரசு தான் காரணம் என இவர் கூறும் குற்றச்சாட்டை இங்குள்ள ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். குறைந்தபட்சம் இது சம்பந்தமாக இவரிடம் என்ன ஆதாரங்கள் உள்ளது என்பதை விசாரிக்க வேண்டாமா? அதன்படி ஒருபடி மேலே போய் இந்த முறைகேட்டில் நாட்டின் பிரதமருக்கும் பங்கு உள்ளது என பேசியிருப்பதை இங்குள்ள பாஜகவினர் கண்டிக்காமல் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடான செயலாகும்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ள எந்த அரசாக இருந்தாலும் மக்களின் உயிரை காப்பாற்ற தகுதியற்ற நிலை ஏற்படும் போது அந்த அரசை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது குறைந்தது ஒரு 6 மாத காலத்திற்காவது அரசை முடக்கம் செய்ய வேண்டும். எங்களது கழகத்தின் பொதுச்செயலாளரின் கோரிக்கையான கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் சம்பந்தமாக சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்ளதுறை அமைச்சகம் நேரிடியாக உத்தரவிட வேண்டும்" என்று அவர் பேசினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.