Advertisment

புத்தகம், பேனாவுடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம்; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு; அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புத்தகம், பேனாவுடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம்; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம்

Kallakuruchi student Sri Mathi burial ceremony: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மாணவி ஸ்ரீமதியின் உடல் 11 நாட்களுக்குப் பிறகு சொந்த ஊரான பெரிய நெசலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13-ம் தேதியன்று பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் கடந்த 17-ம் தேதி பெரிய கலவரமாக வெடித்து பள்ளியில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தனது மகள் சாவுக்கு நீதி கேட்டும், அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

publive-image

அந்த மறு பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர், வழக்கறிஞர், மற்றும் மாணவியின் தந்தை ஆகியோர் உடன் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மருத்துவரை அனுமதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், தானாகவே ஒரு மருத்துவ குழுவை அமைத்து உத்தரவிட்டது. தந்தையும் வழக்கறிஞரும் இருக்கலாம் என்று சொன்னது.

ஆனால் அதை ஏற்காத மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையோடு முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் மாணவியின் உடலை மறுபரிசோதனை செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதனையடுத்து கடந்த 20-ம் தேதியன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயர் நீதிமன்றம் நியமித்த திருச்சி, சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

மறு பிரேத பரிசோதனையில் மாணவியின் தரப்பில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த மறுநாள் 21-ம் தேதியன்று மாணவியின் உடலை மாணவியின் பெற்றோர் பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாணவியின் உடலை இன்று காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் இல்லையெனில் காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டிப்பாக உத்தரவிட்டது.

அதனையடுத்து இன்று காலை மானவியின் உடலை பெற்றுக் பெற்றுக்கொண்டு உடலை அடக்கம் செய்து விடுவதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 6 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், மாணவி உடலைப் பெற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை நோக்கி எடுத்துச் சென்றனர்.

ஸ்ரீமதியை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் பைபாஸ் சாலையை கடந்து செல்லும்போது முன்னே சென்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் முன்பகுதியில் சிறு சேதம் ஏற்பட்டு பயணம் சிறிது நேரம் தடைபட்டது.

பாதுகாப்புக்கு வந்த போலீஸார் உடனடியாக களத்தில் இறங்கி நிலைமையை சரி செய்து பயணத்தை தொடர்ந்தனர். அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்களை வரச்செய்து ஒரே நேர்கோட்டில் அனைத்து வாகனங்களும் பெரியநெசலூர் கிராமத்திற்குள் நுழைந்தது.

மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் ஜடாவத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் மாணவியின் உடலோடு அமைச்சர் கணேசன் பெரிய நெசலூருக்கு சென்றார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களில் 3 ஐ.ஜி.,க்கள் தலைமையில் காவல்துறையினர் உடன் சென்றனர்.

publive-image

மாணவியின் சொந்த ஊரில் சுமார் 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர்காரர்கள் மட்டும் மாணவிக்கு அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதித்தனர். மாணவியின் உடலுக்கு விருதாச்சலம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

மாணவி உயிரிழப்பிற்கு அரசு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறினார். உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மாணவிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்.

இறுதிச் சடங்கில், மாணவி குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என்று நேற்றே அரசு அறிவித்ததையடுத்து உள்ளூர் மக்கள் மாணவியின் சொந்தங்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

காலை 10.50 மணியளவில் ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் துவங்கியது. வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள மயானத்திற்கு மாணவியின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டது. நெசலூர் கிராமத்தை சார்ந்த அனைத்து பொதுமக்களும் முன்னே செல்ல சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் ஸ்ரீமதி ஊர்வலம் நடைபெற்றது. அமைச்சர், தி.மு.க-அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர். ஸ்ரீமதியின் உடலோடு மாணவி பயின்ற 11-ம் வகுப்பு பயாலஜி பாடப்புத்தகம், பேனா ஆகியவை அவரது உடலோடு இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது. மயானம் செல்லும் வழிநெடுகிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஸ்ரீமதியின் உறவினர்களும், சொந்தங்களும் கண்ணீர் மல்க மாணவிக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் 11.35 மணிக்கு ஸ்ரீமதியின் உடல் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் "பெரியநெசலூரில் பிறந்த வளர்ந்த தங்கைக்கு வீர வணக்கம்" என்ற முழக்கங்கள் முழங்க ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக ஸ்ரீமதியின் உடலை எரியூட்டவே உறவினர்கள் வற்புறுத்திய நிலையில், அவரது பெற்றோர் உச்சநீதிமன்றம் வரை சென்றிருந்ததால் மாணவியின் உடலை ஏதும் ஒரு காரணத்திற்காக மீண்டும் உடற்கூராய்வுக்கு உட்படுத்த நேர்ந்தால் என்ன செய்வது என்பதனாலேயே ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment