மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று (புதன்கிழமை) காலையில் கல்லணையில் நீர் திறக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள், ஆட்சியர்கள், விவசாயிகள் பூக்கள் தூவி காவிரி தண்ணீரை வரவேற்றனர்.
கர்நாடக மாநிலம், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த 28-ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காகவும், ஆடி பெருக்கு விழாவை கொண்டாடவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று அணை 120 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர், முக்கொம்பு பகுதிகளை கடந்து, தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு இன்று அதிகாலை வந்தது. இதையொட்டி கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால் சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவூட்டப்பட்டது. இந்த சிலைகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.
முன்னதாக, கருப்பணச்சாமி, ஆஞ்நேயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், மேளதாளத்துடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, சி.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ-க்கள், ஐந்து மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஊர்வலமாகச் சென்று, முதலில், காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டனர்.
இதையடுத்து, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது விவசாயம் செழிக்க வேண்டியும், காவிரி நீரை வரவேற்றும் நவதானியங்களையும் பூக்களையும் ஆற்றில் விட்டனர்.
பிறகு காவிரியில், 40 ஷட்டர்கள், வெண்ணாற்றில், 33, கொள்ளிடத்தில், 30, கல்லணைக் கால்வாயில் ஆறு, மணற்போக்கியில் 5, கோவிலடி மற்றும் பிள்ளைவாய்க்காலில் தலா ஒரு ஷட்டர்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது.
இதன்படி முதல் கட்டமாக காவிரியில் 1,500 கன அடி, வெண்ணாற்றில் 1,000 கன அடி, கல்லணை கால்வாயில் 500 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“