செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வயலூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மாடு மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் மூன்று முறை பல்டி அடித்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த மணி மகன் ராஜேஷ் (22) அதே பகுதியைச் சேர்ந்த காசி மகன் விக்னேஷ் (28), வடபழனியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ஏழுமலை (30), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் (20) மற்றும் ஒருவர் என ஐந்து பேர் புதுச்சேரிக்கு காரில் சென்றுவிட்டு, நேற்று இரவு, சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
கல்பாக்கம் அடுத்த, வயலூர் அருகே இரவு 8.30 மணிக்கு வந்தபோது, திடீரென குறுக்கே வந்த மாடு மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் மூன்று முறை பல்டி அடித்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக காரில், உயிருக்கு போராடி கொண்டு இருந்த நபர்களை மீட்க முயற்சி செய்தனர். இதுகுறித்து உடனடியாக சதுரங்கப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் இணைந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
முதற்கட்டமாக காரில் உயிருக்கு போராடி இருந்த இரண்டு நபர்களை காவல்துறையினர் பொதுமக்கள் உதவி உடன் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரில் பின்புறத்தில் சிக்கிய மூன்று பேர் கார் நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை வெளியில் மீட்க முடியவில்லை. இதையடுத்து காரை வெல்டிங் மிஷன் மூலம் வெட்டி எடுத்து உடல்களை மீட்டு உடற்குறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் செங்கல் பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“