கடலூர் மீன்வளத்துறை அதிகாரிக்கு கல்பனா சாவ்லா விருது

Kalpana chawla award : தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து 10 மீனவ கிராமங்களிடையே உள்ள 500க்கும் மேற்பட்ட மீனவர்களிடையே உரையாற்றி...

கடலூர் மாவட்ட மீன்வளத்துறையின் துணை இயக்குனராக உள்ள ரம்யாலெட்சுமிக்கு, இந்தாண்டிற்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்தி மீ்ன்களை பிடிப்பதன் மூலம், கடல்வளம் அதிகமாக அழிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. ஒருபகுதி மீனவர்கள் இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதனால், மற்ற மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காதநிலை உருவாகிறது. இதன்காரணமாக, அவர்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக மீனவர்கள், மீன்வளத்துறையிடம் புகார் அளித்தவண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மீன்வளத்துறையில் பயிற்சி உதவி இயக்குனராக ரம்யாலெட்சுமி இணைந்தார். தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து 10 மீனவ கிராமங்களிடையே உள்ள 500க்கும் மேற்பட்ட மீனவர்களிடையே உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட மீன்வலைகளின் பயன்பாடு குறைய துவங்கியது.

ரம்யாலெட்சுமியின் இந்த சேவையை பாராட்டி, 2019 – 2020ம் ஆண்டிற்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யாலெட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தார்.
ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையுடன் பதக்கமும் உள்ளடக்கியது கல்பனா சாவ்லா விருது ஆகும்.

விருது பெற்றபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரம்யாலெட்சுமி கூறியதாவது, மீனவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அவர்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மீனவர்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close