Education TV launched: தமிழக அரசு சார்பில் ஒளிபரப்பாகவுள்ள கல்வி தொலைக்காட்சி சேனலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த கல்வி தொலைக்காட்சி பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும், சுய தொழில் வேலைகளை கற்பிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளது.
இந்த கல்வி தொலைக்காட்சி சேனல் அண்ட்ராய்டு மற்றும் ஐ ஓஎஸ் இயங்குதளங்களில் பார்க்க கிடைக்கும் கிடைக்கும் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். மேலும், கடந்த சில மாதங்களாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் கேபிள் இணைப்புகள் கிடைக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், குழந்தைகள் இந்த சேனலைப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி, கல்வி தொலைக்காட்சி தொடக்கவிழாவை அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகள் கல்வி தோலைகாட்சியின் யூ டியூப் சேனலில் பதிவேற்றப்படும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் கல்வி தொலைக்காட்சியைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், “மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும். வீட்டில் டிவி பார்க்கும் மாணவர்கள் சரியாக படிப்பதில்லை என்ற நிலை இனி மாறும். தமிழகத்தில் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது” என்று கூறினார்.
கோட்டூர்புரத்தில் நடைபெற்ற கல்வி தொலைக்காட்சி தொடக்கவிழாவில், முதலமைச்சர் பழனிசாமியுடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.