கமல்ஹாசன் இன்று காலை எண்ணூர் துறைமுகம் கழிமுகம், சாம்பல்குளம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். அந்த பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ட்விட்டரில் மட்டுமே கருத்து சொல்லி வந்த கமலின் திடீர் ஆக்ஷன் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புக்கள் இருந்தால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நேற்று தனது டிவிட்டரில் எண்ணூர் துறைமுக கழிமுகம் பகுதியில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்தும் ஆக்கிரமிப்பு குறித்தும் வெளியிட்டதோடு, இதனால் வட சென்னைக்கு ஆபத்து என்பதையும் சொல்லியிருந்தார்.
வழக்கம் போல கமல் ட்விட்டரில் கருத்து சொல்வார். அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் இன்று காலை அதிரடியாக கமல், எண்ணூர் துறைமுக கழிமுகம் சாம்பல்குளம் சென்றார். அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த சம்பவம் நடந்த ஒரிரு மணி நேரத்துக்குள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பதிலளித்துள்ளார்.
திருவள்ளூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘எண்ணூர் துறைமுகம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ள அபாய பகுதியாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சாம்பல் கழிவு தொடபாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு முடிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.