”ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்”: டிடிவி தினகரன் பதிலடி

நடிகர் கமல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு “ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது”, என டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றதாக, நடிகர் கமல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு “ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது”, என டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார்.

பிரபல வார இதழில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற பெயரில் கட்டுரை எழுதிவருகிறார். இந்த வார கட்டுரையில், கமல்ஹாசன், “ஆ.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூட சொல்லமாட்டேன்.
சில அரசியல் அறிஞர்களும்,  ‘ஆஹா… இவைதாம் வெற்றிக்கான வியூகங்கள்’ என்றும் பட்டியல்போட்டுப் பாராட்டுகிறார்கள். அவற்றில், ‘இருபதாயிரம் ரூபாய் அமவுன்ட்டுக்கான டோக்கனா இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா’ என்ற பார்புகழும் பாராட்டும் குறிப்பிடத்தகுந்தது.”, என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆர்.கே.நகர் மக்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளதாகவும், இது பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம் எனவும், அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதுபோன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா எனவும் எழுதியுள்ளார். டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக கமல்ஹாசன் அக்கட்டுரையில் மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “நடிகர் கமலை பண்பாளர் என நினைத்திருந்தேன். அவர் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்தும் நோக்கில் கமல் கூறியிருக்கிறார்”, என தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close